மூடு

வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாகக்கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனைத்தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெனியினை நிறுவினார்கள்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டபொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு,பருத்திநூல்,சென்னா இலைகள்,பனைப்பொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளைக்கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியைச்சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குப்பாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெப்ப நிலையைக்கொண்ட பகுதியாகும். சிறிய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்ப்புற வளாச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.