மூடு

கால்நடை வளர்ப்பு

துறையின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள்:

  1. கால்நடை பராமரிப்பு, வேளாண்மையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது மட்டுமன்றி மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாயுள்ளது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனள்ள வேலை வாய்ப்பு வழங்குவதன்மூலம், அவர்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும் துறையாகவும் விளங்குகிறது. கால்நடைகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, குடும்ப தொழிலுக்கு அடுத்து, முக்கியமான வருவாய் மூலமாக இருப்பதுடன், அவர்களுக்கு ஒரே பெரிய சொத்தாகவும் விளங்குகிறது
  2. அயலின மற்றும் கலப்பின உறைவிந்தைப் பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் செய்து, உள்ளுர் பசுக்களின் தரத்தையும், முர்ரா இன உறைவிந்தைப் பயன்படுத்தி எருமைகளின் தரத்தையும் உயர்த்துவது
  3. உள்நாட்டின கால்நடைகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பது மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவது
  4. கால்நடை மற்றும் கோழியினங்களுக்கும் தேவையான காலத்தில் நவீன மருத்துவ சேவை அளிப்பது
  5. தடுப்பூசிகள் வாயிலாக, நோய்களை தடுத்து அனைத்துக் கால்நடைகளின் உடல்நலனை உறுதிப்படுத்துவது
  6. கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது
  7. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது
  8. நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது
  9. அடிப்படை மற்றும் நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளிப்பது

திட்டங்கள்

கால்நடை பராமரிப்பு, இலட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் தொழிலாக விளங்குகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்போது கிராமப்புறப் பகுதிகளில் நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான, பயனாளிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை இத்துறை செயல்படுத்தி வருகிறது.

விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள்

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லாக் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் வாழ்கின்ற ஏழை பயனாளி ஒருவருக்கு குடும்பத்திற்கு ஒரு கறவைப் பசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரவு 09.07.2011 அன்று அறிவித்தது.

தமிழ்நாடு அரசு, ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழைகளுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஆறு முதல் எட்டு மாத வயதுடைய ஒரு கிடா மற்றும் மூன்று பெட்டை ஆடுகள் வழங்கப்படுகின்றன.

கோழியின அபிவிருத்தித் திட்டம் :

நாமக்கல் மாவட்டத்தை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில், வணிக ரீதியில் அபிவிருத்தியாகியுள்ளது. இந்த வெற்றியை இதர மாவட்டங்களில் பிரதிபலிக்கச் செய்வதற்காகவும், கோழிப் பண்ணைத் தொழில் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் கோழிப் பண்ணைத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும் , தமிழ்நாடு அரசு கோழியின அபிவிருத்தி திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி, பயனாளிகளில் குறைந்தபட்சம் 33 விழுக்காட்டினர் கட்டாயமாக ஆதி திராவிடர் / பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

கறிக்கோழி பண்ணை நிறுவுதல்:

கறிக்கோழி வளர்ப்புத் திட்டம், பயனாளி, வங்கியாளர் மற்றும் கோழி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு நாள் வயதுள்ள கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்களை பண்ணையாளர்களுக்கு வழங்குகிறார்கள். மேலும் அவர்களே உற்பத்தியாகும் கறிக்கோழிகளை சந்தைப்படுத்துதலையும் மேற்கொள்கிறார்கள். இதற்கான வளர்ப்புத் தொகையை ஒருங்கிணைப்பாளர்கள் பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். 5,000 கோழிகள் கொண்ட கறிக் கோழிப் பண்ணை, ஒரு குடும்பத்தினுடைய உழைப்பை மட்டுமே கொண்டு இலாபகரமாக செயல்பட முடியும். இத்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு மாநில அரசின் 25 விழுக்காடு மானியமாக ரூ.2,68,750 வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு:

நாட்டுக்கோழி இறைச்சிக்கு மாநிலமெங்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதால், நாட்டுக்கோழிகளை 250 / 500 என்ற சிறிய அளவில் இலாபகரமாக வளர்க்கவும் மற்றும் பயனாளிகளே அதனை விற்பனை செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். பயனாளிகள் நாட்டுக்கோழி இனவிருத்தியாளர்களிடமிருந்தோ / குஞ்சு பொரிப்பு நிறுவனங்களிடமிருந்தோ கோழிக் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 250 கோழிகளை வளர்ப்பதற்கு பயனாளி ஒருவருக்கு 25 விழுக்காடு மாநில அரசின் மானியமாக ரூ.44,850 வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளை இந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட ஊக்குவிக்கும் பொருட்டு கோழிக் குஞ்சுகள் விலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுழற்சிகளில் முறையே 50 விழுக்காடு மற்றும் 30 விழுக்;காடு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

மாநில தீவன அபிவிருத்தித் திட்டம்

கால்நடைகளின் உற்பத்தித்திறனை நிர்ணயிப்பதில் பசுந்தீவனம் முக்கியமான காரணி ஆகும். பசுந்தீவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கால்நடைகளுக்கு அளிப்பதால் அவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், உயிர் சத்துகளும் கிடைக்கின்றன. எண்ணிக்கை அடிப்படையிலும், தரத்தின் அடிப்படையிலும் பசுந்தீவன தேவைக்கும் உற்பத்திக்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.

உற்பத்தியை பயன்படுத்திக்கொள்ளுதல் வாயிலாக, உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக 2011-12-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டு வரை மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறவை சாகுபடி: உயர்ரக தீவன சாகுபடி மேற்கொள்ள ஓர் அலகான 0.25 ஏக்கர் பரப்பிற்கு 100 விழுக்காடு மானியமாக ரூ.2000 மதிப்புள்ள உயர்விளைச்சல் பசும் புல்கரணைகள் வழங்குதல்.
மானாவாரி சாகுபடி: தீவன சோளம், காராமணி சாகுபடி செய்ய ஓர் அலகான 0.25 ஏக்கர் பரப்பிற்கு 100 விழுக்காடு மானியமாக ரூ..290 மதிப்புள்ள தீவன விதைகள் வழங்குதல்.
ஊறுகாய் புல் தயாரித்தல்: விவசாயிகளுக்கு 250 கிலோ அளவு கொண்ட 4 சைலேஜ் பைகள் இலவசமாக ஊறுகாய் புல் தயாரிக்க வழங்குதல்
மரக்கன்றுகள் வழங்குதல்: கால்நடை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குதல்
அசோலா சாகுபடி: அசோலா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தலா 1 அலகுக்கு 100 விழுக்காடு மானியமாக ரூ.2550 வழங்குதல்.

உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டங்கள்

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குதன் வாயிலாக, கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதன் வாயிலாக, கால்நடை உற்பத்தித் திறன் அதிகரிக்கும். ஊரக மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டு, மாநில, மைய அரசின் நிதி மற்றும் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் துறையின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மண்டலம்-கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்கள்:

வ.எண் பெயர் மற்றும் பதவி தொலைபேசி/கைப்பேசி எண் மின்னஞ்சல் முகவரி
1 மண்டல இணை இயக்குநர்
கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி
0461-2300517 jointdirector[at]gmail[dot]com
2 துணை இயக்குநர் (கூ.பொ)
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, தூத்துக்குடி
ddcbfdtut[at]gmail[dot]com
3 கால்நடை மருத்துவர்,
கால்நடை மருத்துவமனை, கோவில்பட்டி.
0461-2322802 adahtuticorin[at]gmail[dot]com
4 உதவி இயக்குநர்
கால்நடை பராமரிப்புத்துறை, தூத்துக்குடி.
04639-246069 adahkvp[at]gmail[dot]com
5 உதவி இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை, திருச்செந்தூர்,
04632-221911 adahtcr[at]gmail[dot]com
6 உதவி இயக்குநர் (கூ.பொ)
கால்நடை பராமரிப்புத்துறை, கோவில்பட்டி
0461-2324715 tntut-nadrs[at]nic[dot]in

தகவல் அறியும் உரிமைச்சட்டம்

பொது தகவல் அலுவலர்
மண்டல இணை இயக்குநர்
கால்நடை பராமரிப்புத்துறை,
தூத்துக்குடி.